நாலு பல்ப்பும் நாற்பது பேரும் 


வேட்பாளர் தொகை பெருகிப் போச்சு

வாக்காளர் நிலமை(யோ) பரிதாபமாப் போச்சு

நாலு பல்ப்பு மாத்த நாற்பது பேர் போட்டி

நாகரீகமாம் அதுக்கொரு நாலு முழ வேட்டி 


வெளியில போக பயமா இருக்கு

வில்லங்கத்துக்கு சிரிக்கிறாங்கள் 

வெட்டியா திரிஞ்சவனும் 

வேட்பாளரா இறங்கிட்டான் 

சட்டம் பற்றி என்னென்னவோ பேசுகிறான்

சட்டம் படிச்சவனுக்கே வகுப்பெடுக்கிறான் 


வீட்டுகாரிக்கு பயந்துகொண்டு 

வீட்ட விட்டு வெளியில் வராதவன் 

வேட்பாளர் எண்டு ஆன பின்னே

றோட் அளந்து திரியிறான் 


அயலவன் எண்டு நினைச்சு

எப்பவாச்சும் உதவி கேப்பன்

அப்ப எல்லாம் செய்யாதவன் 

இப்ப வந்து உதவி தேவையா எண்டு

அநியாயத்துக்கு நடிக்கிறான் 


அவசரத்துக்கு கோல் எடுத்தா

அஞ்சு நாள் கழிச்சு திருப்பி எடுக்கிறவன் 

நான் எடுக்காமலே அவசரமோ 

ஏன் எடுத்தனி எண்டு எடுத்து கேக்கிறான் 


கண்டு பெருசா சிரிக்காத ஒருத்தர் 

கேட்டுத்தான் சிரிப்பை வாங்கோனும்

பாக்கிற நேரமெல்லாம் சிரிக்கிறார்

பல்லைக் காட்டிக்கொண்டு திரியிறார்- அட 

கடைவாய் பல்லு சூத்தை எண்டு

கண்டுபிடிச்சு சொன்னதே நான்தானே 


வீட்டுப் பிரச்சனைக்கே தீர்வு காணமுடியாதவர் 

இனப்பிரச்சனைக்கு தீர்வு பெற்றுத் தருவாராம் 

ஐநாவில கதைப்பாராம் சைனாவை எதிர்ப்பாராம்

மெயினான வேலை பல்ப்பு மாத்திறத எண்டதை மறந்து 

லைனா அடுக்கிக்கொண்டே போறார் 


வட்டிக்கு காசு குடுக்கும் பெரிய மனுஷர் 

வட்டி வீதம் குறைச்சுத் தருவாராம் 

கட்டாயம் தனக்குத்தான் போடச்சொல்லுறார்

வட்டாரம் மாறி எல்லோ வாக்குக் கேக்கிறாய் 

கட்டுக்காசும் கடைசியில் கிடைக்காதெண்டு 

எட்டி நானும் சொல்லீட்டு வந்திட்டன் 


Comments