புதிதான அதிகாலை

 புதிதான காலைப்பொழுது 


வழக்கமாக

வாகன இரைச்சல்களோடு

விடியும் காலை

இன்று மட்டும் புதிதான

அனுபவம் தந்தது 


செம்பாட்டு புழுதி வாசம்

கலப்படமில்லாமல் இருந்தது 


செங்கதிரோனும் அளவில்லா

ஆனந்தம் கொண்டிருப்பான்

இன்று வரவேற்பு 

சற்று அதிகமாக இருந்தது 


நேரந்தவறி வரும் பட்டாம்பூச்சிகள் கூட 

இன்று நேரத்துக்கே வந்துவிட்டன

காரணம் கேட்டேன்

பூக்கள் மலரும் ஓசை

இன்றுதான் தடங்கலின்றி கேட்டதாம் 


பறவைகள் எழுப்பும் ஒலிகள் 

எந்தவொரு தடங்கலும் இல்லாமல்

கேட்டது


தேனீக்களின் ரீங்காரமும்

தூரத்து கோயிலின் ஓம்காரமும்

மிகத் துல்லியமாக கேட்டது 


அணில்களின் கீச் கீச் ஒலியும்

அன்னலிங்கத்தாரின் மிதிவண்டி

எழுப்பும் கீச் கீச் ஒலியும்

இன்றுதான் வேறுபிரித்து

உணரக்கூடியதாக இருந்தது 


இந்த ரம்மியமான பொழுதுகள்

நீடித்திருப்பதெல்லாம் 

மிதிவண்டிகள் கொல்லைக்குள்

போகும் வரை மட்டுமே


✍️ இணுவை நித்தியதாஸ் ✍️

Comments