மழைக்கால இரவுகள் 🌝🌧️

 மழைக்கால இரவுகள் 🌝🌧️



மாரியில் மனம் மகிழும்

மாபெரும் விழா நிகழும் 

காரிருள் உரசிக் கொள்ளும் 

பேரிகை போல் முழக்கம் எழும் 


மண்ணினை மழைநீர் தழுவும் 

வெண்ணிலா வெக்கத்தில் ஒளியும் 

மின்மினிகள் ஒளியால் அலங்கரிக்கும்

மின்னலும் இடையே கண்சிமிட்டும்


கெஞ்சிரா வாசிக்கும் தவளைகள்- விளக்கை 

கொஞ்சி மடியும் மழைப்பூச்சிகள்

நஞ்சிடும் நாக பாம்பாய் - காற்றில் 

நர்த்தனமாடும் கமுக மரங்கள் 


காதருகே சுருதி இசைக்கும் நுளம்புகள் 

கூடவே தாளம் போடும் வெட்டுக்கிளி 

கூதல் போக்க அடுப்பில் தூங்கும் பூனைகள்

காதல் ஏக்கத்தில் சமிக்ஞை காட்டும் பல்லிகள்  


அழைக்காமல் வரும் அட்டைகள்

கலைத்தாலும் வரும் விட்டில்கள்

தனியாக வரும் நத்தைகள் 

அணிவகுத்து வரும் எறும்புகள்


மழைக் கூதல் தாங்கா மரங்கள் 

மரக் கிளை உரசி உஷ்ணம் உணரும்

கிளிகள் கிளையை அலங்கரிக்கும் 

கிளை ஒடிய கிளி ஒப்பாரி வைக்கும் 


காய்கள் போல் வௌவால்கள் கிளையில் தொங்கும்

நாய்கள் பல ஊளையிட்டு ஊரைக் கூட்டும்

வாய்கள் இருக்கெண்டு ஆந்தைகள் அலறும்

பேய்கள் உலவுவது போல் எண்ணமும் தோன்றும் 


சில்வண்டு இசை கேட்டு பொன்வண்டு தூங்கும் 

சிறுவண்டு இலையிடையே சிக்குண்டு மீளும்

தேன்சிட்டும் மழைபட்டு சிதறுண்ட தேனை

புண்பட்டு மனம் நொந்து அழுதுண்டு போகும் 


தூறலில் உடல் நனைத்தது 

தூவானமாய் எனை அணைத்தது

தனிமைக்கு இனிமை ஊட்டியது

மனதுக்கு மகிழ்வானது மழையானது


#இணுவை_நித்தியதாஸ்_இயற்கை_என்_காதலி

Comments