அப்பாவின் சைக்கிளின் கோபம்

அப்பற்றை சைக்கிள்

அருமந்த சைக்கிள்

குப்பைக்குள் புரண்டு

கோடிக்குள் கிடந்தது 


நாப்பது வருச காலம் 

நான்தானே சுமந்தனான்

இப்பத்தான் தெரியுதோ என்று

ஏக்கத்துடன் கேட்டது


அப்பரோடு இருந்த காலம்

அது என்ர வசந்தகாலம் 

எப்படியெல்லாம் வச்சிருந்தார்

எங்கெல்லாமோ சுத்தி திரிஞ்சம் 


கொப்பரும் கொம்மாவும்

கல்யாணம் கட்டின நேரத்தில

எப்பவும் எல்லா இடமும்

என்னைதான் கூட்டிப் போவினம்


செக்கன்ட் சோ சினிமாவுக்கும்

சாமத்தில் போய் வருவம் 

சொக்கன் கடை தேத்தண்ணிக்கும்

சட்டென்று போய் வருவம்


வாட்டப்பம் இழுப்பதுவும்

வாழைக்குழை கட்டுவதும்

தோட்டம் துறவு எல்லாம்

தினம் தினம் போய் வருவம்


மூட்டை சுமப்பதற்கும்

மரக்கறி வாங்குவதற்கும்

தொட்டதுக்கெல்லாம் வந்தேனே 

தொட்ட என்னை விட்டதுமேன்


கண்ணே நீ பிறந்த பின்னே 

சின்னக் கரியர் பூட்டி

உன்னைச் சுமந்த பொழுதுகள்

இன்னும் மறக்கவில்லையடா


சின்னவன் நீயும் 

சில்லுக்குள் கால் கொடுத்து

கண்ணீர்விட்டு அழுதது தாங்காமல்

என்னை நானே தண்டித்தேன்

எப்படி உனக்கு தெரியும்


தட்டித் தட்டி ஓட பழகியதும்

தடுமாறிக் கீழே விழுந்ததுவும்

வெட்டி வெட்டி ஓடிக்காட்டி 

பெட்டைகளுக்கு சீன் போட்டதுவும்

போகாது உன்னுடனான நினைவுகள்


ஏற்றித் திரிஞ்ச என்னை

எப்போதோ கைவிட்டீர் 

பெற்றோல் இல்லையென்று 

பற்று வந்ததுவோ திடீரென்று


✍️இணுவை நித்தியதாஸ்✍️



Comments