மார் மீது தூங்கும் மார்கழியே
மார்கழியில் மனம் களிக்கும்
ஆர்கலியில் ஆதவன் குளிக்கும்
போர்வைக்குள் பனி படுக்கும்
சோர்வுதனை அது கொடுக்கும்
ஊர் தொலைவில் மணி ஒலிக்கும்
திருவெம்பாவை துயில் எழுப்பும்
பேர்வழிக்கு தானும் இருப்பதாய்
கூரைச் சேவல் பின்னே எழுப்பும்
கீற்றொளியை சூரியன் பரப்ப
நர்த்தனம் ஆடிடும் மயிலினங்கள்
தீர்த்தமாடி முடிக்கும் புல்வெளிகள்
தீர்ந்து போய்விடும் பனித்துளிகள்
வாரிக்கொண்டை போட்ட பெண்டிர்
வாசல் கோலம் போட்டிடுவார்
நேரமாச்சு தோட்டத்துக்கு
சாறிப் பாத்தியாக்கச் சொல்வர்
நீர் குளிரும் என்ற பின்னும்
நீள் துயிலை குழப்பிடுவர்
மூரி மட்டை ஓலை சிரட்டையென
மூட்டி உலை வைத்து தருவர்
மாரி முடிந்ததை மறந்துவிட்டு
மார்கழியை கொண்டாடுது மழைத்துளி
பார் வெளியில் வந்து மனிதா
வாரி அணைக்க சொல்லுது இயற்கை
மார்கழியை கொண்டாடுவோம்
இணுவை நித்தியதாஸ்

Comments
Post a Comment