வாத்தியாரின் வாய்ப்புளிப்பு

 வாத்தியாரின் வாய்ப்புளிப்பு 



வாய் புளிக்குதெண்டு புலம்பின வாத்தியாரை

நோய் வந்து எலும்பு தேஞ்சு

நொண்டி நடப்பவரை

வெத்தில போட்டா நல்லதெண்டு 

போய்வாரும் சந்தைக்கு

புளிப்பு எடுபடும் எண்டு

பாயில படுக்க விடாம

பாஞ்சு விழுந்து 

மூஞ்சூறு போல் சினத்து

முடிச்சை அவிட்டு 

பத்து ரூபாய் மட்டும் கொடுத்து

வெத்திலை மட்டும் வேண்டி போடு 

பத்திரமா போட்டுவா எண்டு 

பத்து தடவை கத்திச் சொல்லி

மிச்ச காசை கொண்டு வா

மினக்கடாம வேளைக்கு வா எண்டு

வழியனுப்பி வச்சார்

வாத்தியாற்ற மனிசி 


போன மனுஷன் உள்ள போய்

கடை தேடி சுழண்டடிச்சு தலை சுத்தி 

தூணை பிடிச்சபடியே இருந்தபடி 

போன முறை வந்த போல எதுவும் இல்லை

இடம் மாறி வந்திட்டனோ

இஞ்சை ஆரையன் கேப்பமோ எண்டு புலம்பி 

இடம் கேட்டு கடை பிடிச்சு கை நீட்டினார்

பத்து ரூபாய்க்கு சீவல் வெத்திலை எண்டே 


வெறும் வெத்திலை மட்டும் குடுத்துவிட்டு 

வெறுப்பேத்த வேண்டாம்

வெளியால போங்கையா

வேற வேலை பாருங்கையா

கடைக்காரன் சொல்லவே 


வாத்தியார் குழம்பிவிட்டார்

கொள்ளையடிப்பதுமேன்

கொல்லையில போவாரே

குறுக்கால போவாரே துலைவாரே 

ஒரு வெத்திலை பத்து ரூபாயோ

ஊருக்கை கேட்டுப்பார் 

தெரியாது என்னை பற்றி 

மரியாதையா மிச்சத்தை 

தந்திடு 


சீமான் கடைக்காரன் தொடங்கினான் 

சாமான் விலை தெரியுமோ உனக்கு 

அம்மான ஒண்டும் தெரியாதோ 

சும்மாதான் நடிக்கிறியோ 

கோமாவில் இருந்தீரோ 

கோளாறு ஏதுமுண்டோ உமக்கு 

கொரோனா வந்த பின்னே

கொடுத்தொண்டும் வாங்கலையோ 


வெகுநேரம் தொடர்ந்த தகராறில்

வெத்திலை போடாமலே வாய் சிவந்தது

எப்படி இது சாத்தியம் 

அப்பிவிட்டான் கடைக்காரன் வாய் மேலே

அப்படியே வந்தவர் தான் 


சுண்ணாம்பு கேட்டவரை

அண்ணாந்து பார்த்த போது

அடிச்சுவிட்டான் கடைக்காரன் 

சொண்டுடைஞ்சு ஊறிய ரத்தத்தை

நிண்ட மரத்தடியில் 

துப்பவெண்டு போனார் 


வெத்திலை துப்ப வேண்டாம் 

வீணாக தண்டப்பணம் கட்டவேண்டாம் 

சுகாதார சீர் கேடாம்

சுத்தமாக இருக்கட்டாம்

கொரோனா பரவுமாம்

கொடிய நோய் பரவுதாம்

பீடி அடித்த படி துப்பிக்கொண்டே

பெடி ஒருத்தன் சொன்னான் 


வேண்டாம் சோழி வீட்டை போயே துப்புவம் எண்டு சைக்கிளை எடுத்தவரை 

காண்டில பிடுச்சு நிறுத்தி

காசை எடு எண்டு டிக்கட்டை நீட்டினான்

சைக்கிள் பார்க்கில நிண்டவன்

பத்து ரூபாய் இல்லை

அதுக்கு பதிலா

வெத்திலையை வச்சுக்கொள் எண்டார்

வாய் நிறைய போட்டு

வக்கணையா குதப்ப காசிருக்கு

பத்து ரூபாய்க்கு மட்டும் கஞ்சத்தனம்

சலித்தபடியே வாங்கிகொண்டான்

சகித்துகொண்டார் வாத்தியாரும் 


தட்டுத் தடுமாறி வீட்ட போனவரை

மட்டு மரியாதை இல்லாம

மிச்ச காசு எங்கை எண்டாள் மனுசி 

எச்சிலோடு இருந்த ரத்தத்தை

மூஞ்சூறு போல் சினத்தவளின் 

மூஞ்சயில துப்பிவிட்டு சொன்னார்

இதுதான்டி மிச்சம் எண்டே 


இப்ப வாய்ப்புளிப்பும் இல்லை எண்டார்

Comments