நவீன சரஸ்வதி சபதம்
வென்றால் போதுமென்று வெற்று வாக்குறுதி வழங்கிவிட்டு
வென்ற பின்னே எதுவும் செய்யாமல்
கண்டபடி எல்லாம் விலை ஏற்றியவனை
கண்டால் வரச்சொல்லுங்கோ
சகலதும் விலை சகலகலாவல்லியே! 1
நாடும் கடன் சுமை பொருள் விலை
நோய்நொடி துன்பம்
மேடும் பள்ளமும்தான் வாழ்க்கை என்பர்
நாடே பள்ளத்தில் வீழ்ந்து கிடக்கு
சூடும் சுரணையும் இல்லா
கேடு கெட்டவர் ஆட்சியில்
வாடும் மக்களுக்கு மீள என்ன வழி
சகலதும் விலை சகலகலாவல்லியே! 2
அழிக்கும் ஆயுதங்கள் கொத்துக்குண்டுகள் தாண்டி
வழிக்கு வழி எம் உறவுகள் மடிவது கண்டு கனத்து
குழிக்குள் பயந்து ஒழித்து வாழ்ந்து மீண்டு வந்தால்
பழிக்குத் தான் வாழ்க்கையா என்றே எண்ணத்தோன்றுது
சகலதும் விலை சகலகலாவல்லியே! 3
தூக்கும் பல்லக்கில் அவர்கள் வாழ்க்கை வகை வகையாய் உணவுகள்
வாக்கு வங்கியை நிரப்பியோரின்
வயிறு நிரப்ப என்ன வழி
சாக்குப் போக்கு சொல்லி பேக்காட்டுவதும் எதுக்காக
நாக்கு வறண்டு உயிர் போக வேண்டாமே
சகலதும் விலை சகலகலாவல்லியே! 4
பஞ்சத்தில் மக்கள் பரிதவிக்க பஞ்சுமெத்தையில் அவர்கள் உறக்கம்
நெஞ்சம் கனத்து வெடிக்கிறது விலைவாசி கேட்டுக் கேட்டு
கெஞ்சி மன்றாடிக் கும்பிட்டு கேட்கின்றோம்
கஞ்சியாவது குடிப்போம் அரிசி விலை குறைத்தால்
சகலதும் விலை சகலகலாவல்லியே! 5
மண்ணும் மலை வளம் கடல் வளம் எல்லாம் விற்று விட்டு
கண்ணும் கருத்துமாய் பார்த்த விவசாயத்திலும் கை வைத்தார்
இன்னும் என்னென்ன செய்வாரோ ஈழக்குடிகளுக்கு
உண்ணும் உணவிலும் கை வைத்தால் என் செய்வோம்
சகலதும் விலை சகலகலாவல்லியே! 6
வீட்டுக்குள் இருந்து வாழும் வாழ்க்கைக்கு பழகிவிட்டோம்
வேட்டுச் சத்தங்களும் கேட்டு கேட்டு பழகிவிட்டோம்
கொட்டும் மழையும் கொழுத்தும் வெயிலும் தாங்க பழகிக்கொண்டோம்
கூட்டும் பொருள் விலைதனை எப்படி தாங்குவோம்
சகலதும் விலை சகலகலாவல்லியே! 7
சொல்லாமல் செய்பவர் எல்லாம் பெரியார் என்பார்களே
சொல்லாததெல்லாம் செய்பவரை என்னவென்று சொல்வது
நல்ல வளங்களை இல்லாமல் செய்பவரை என்னவென்று சொல்ல
மெல்ல மெல்ல சிறுக சேமித்து கல் வீடு கட்டவென்றால் சகலதும் விலை சகலகலாவல்லியே! 8
தொற்றும் நோய்களுடன் இசைந்து வாழப்பழகிவிட்டோம்
கற்பனை கனவுகள் எல்லாம் குழிதோண்டி புதைத்துவிட்டோம்
பற்பசையிலிருந்து பற்பொடிக்கு மாறிவிட்டோம்
விற்கும் பொருட்களின் விலை இனி குறையாதா
சகலதும் விலை சகலகலாவல்லியே! 9
மண்கொண்ட வளங்கள் எல்லாம் கண்முன்னே பறிபோகுது
முன்கண்ட பொருட்கள் எல்லாம்
இனி காணக் கிடைக்காதா
புண்பட்ட மனங்களை ஆற்ற வழிஏதும் கிடைக்காதோ
கண்கண்ட தெய்வமே கண் திறந்து பாராயோ
சகலதும் விலை சகலகலாவல்லியே! 10

Comments
Post a Comment