பெற்றோல் அடித்துப்பார்

 பெற்றோல் அடித்துப்பார்..!


பெற்றோல் அடித்துப்பார்

செற்றிலேயே செற்றிலாகிவிடுவாய்

பெற்றோல் கிடைத்துவிட்டால் 

பெருமையாய் உணர்வாய் 


விற்பனை முகவர்கள் 

சுற்றிலும் சுழல்வதை காண்பாய் 

கற்றோர் கல்லாதோர் எல்லாம்

சமம் என்று உணர்வாய் 


பெற்றோல் அடித்துப்பார்..!


தூக்கம் தொலைப்பாய்

மழையிலும் நனைவாய் 

மூன்று நாளானாலும்

பல் துலக்க மறப்பாய் 


வயிற்றுக்கும் தொண்டைக்குமிடையில் 

ஈரம் இல்லாமல் போவதை உணர்வாய்

ராத்திரி பகல் தெரியாது

காத்திருப்பாய் மணிக்கணக்காய்


பெற்றோல் அடித்துப்பார்..!


காட்டுக்கு மட்டும் என்பார் சிலர் 

QR மட்டும் என்பார்  ஒரு சிலர் 

QR உம் காட்டும் என்பார் சிலர்

கேட்டுக் கேட்டே சலித்துப் போவாய்


காக்கை மட்டுமா கறுப்பு

காய்ந்த நானும் கறுப்பென்பாய்

நாக்கை வெளியில் தள்ளிக்கொண்டே

நாயைப் போல தள்ளிச்செல்வாய் 


பெற்றோல் அடித்துப்பார்..!


இடைச்செருகல்கள்  இடம்பெறும்

கடை வாசல் எல்லாம் அடைபடும்

கடைக்காரன் குழம்பியடிப்பான்

கடைசியில் மேலாலே ஏறிக் குதிப்பான்


இரண்டங்குல இடைவெளியிலும்

இன்னொரு பைக் நுழைவதை பார்ப்பாய்

இடிபட்ட உடனே கண்ணாடி நொருங்கும்

சிக்னல் ரெண்டும் உடைந்து தொங்கும் 


பெற்றோல் அடித்துப்பார்..!


காட் தராமல் இழுத்தடித்த விதானையும்

இடையில் வந்து செருகுவார் 

இதுதான் சந்தர்ப்பம் என்று

கண்டபடி பேசுவாய் 

 

கண்ணிரண்டும் கோபம் கொள்ளும்

கைகள் இரண்டும் முறுக்கேறும் 

உனக்கும் கெட்ட வார்த்தை வரும்

இறுதியில் மூக்கால் ரத்தம் வரும் 


பெற்றோல் அடித்துப்பார்..!


தூசனம் பேசியதாய் தண்டித்த வாத்தி

தூசனம் பேசுவதை காண்பாய்

நடு ரோட்டில்தான் நிற்பாய் என்ற

வாத்தியாரும் பக்கத்தில்தான் நிற்பார்


இரண்டடி இடைவெளியில்

பெற்றோல் பம் இருந்தும்

இல்லாமல் போவதை உணர்வாய்  

இறுதியில் பைத்தியமாவதை உணர்வாய் 


பெற்றோல் அடித்துப்பார்..!


✍🏻️இணுவை நித்தியதாஸ்✍🏻️


Comments